எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கடும் மோதல்: மீண்டும் 10ம் தேதி கூடி பேச முடிவு

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் மோதிக் கொண்டனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மீண்டும் 10ம் தேதி கூடி பேசவும் எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிமுக கூட்டணி தமிழகத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக வேட்பாளர்கள் மட்டும் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றுள்ளது. இதையடுத்து அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

 ஏற்கனவே, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நிறுத்தப்பட்டார். இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, தேர்தல் தோல்விக்கு பிறகு யாரை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுப்பது என்பதில் அதிமுகவில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.  இந்தநிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் வந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு வரும் போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு ‘எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் தான்’ என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மூத்த நிர்வாகிகள் இருவரின் ஆதரவாளர்களையும் சமாதானப்படுத்தி தனித்தனியாக ஒழுங்குபடுத்தினர்.

 இதையடுத்து, மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, முனுசாமி, தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10 பேர் மட்டும் தனியாக ஒரு அறையில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரை முடிவு செய்து, பின்னர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டிருந்தார். இதற்காக இந்தக் கூட்டம் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, நான் 234 தொகுதிக்கும் தேர்தல் செலவுகளை கவனித்துக் கொண்டேன். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். என்னால்தான் 65 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். முதல்வர் வேட்பாளராக நான்தான் அறிவிக்கப்பட்டேன். தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனால், எனக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்றார்.  இதை எடப்பாடி கூறியதும், ஓ.பன்னீர்செல்வம் பட்டாசுபோல வெடிக்க ஆரம்பித்து விட்டார். அதிமுக தோல்விக்கு முழுக்க முழுக்க நீங்கள்( இபிஎஸ்) தான் காரணம். சசிகலாவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

ஆனால் பிடிவாதமாக மறுத்து விட்டீர்கள். இதனால் டிடிவி தினகரன் 40 தொகுதிகளில் நம் வெற்றியை தடுத்து விட்டார். சரி அதோடு விட்டீர்களா? வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினீர்கள். யாரைக் கேட்டீர்கள். அமைச்சரவைக் கூட்டத்திலும், சீனியர்கள் கூட்டத்திலும் அவசரப்பட வேண்டாம் என்றேன். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முதல்நாள் திடீரென யாரையும் கேட்காமல் அறிவித்து விட்டீர்கள். சேலத்தில் வன்னியர்கள் அதிகம். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள். அப்படி என்றால் காஞ்சிபுரம், வேலூரில் ஏன் அதிமுக வெற்றி பெறமுடியவில்லை.  இடஒதுக்கீடு விவகாரத்தால்தான் தென் மாவட்டங்களில் அதிமுக தோற்றது. பல மாவட்டங்களில் நாங்கள் ஊருக்குள் செல்ல முடியவில்லை. போராட்டங்கள் நடந்தது. ஒருவர் மட்டும் எதிர்க்கவில்லை. 118 சமூகத்தினர் எதிர்த்தனர். குறிப்பாக தேவர், யாதவர், செட்டியார், முத்தரையர் என பலரும் எதிர்த்தனர். இதனால்தான் டெல்டா முதல் நெல்லை வரை தோற்றோம். வட மாவட்டங்களிலும், மற்ற சமூக வாக்குகள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

இதனால் வட மாவட்டங்களிலும் தோற்றோம். 234 தொகுதியில் 65 இடங்களைப் பிடித்தது பெரிய வெற்றியா. தோல்விக்கு நீங்கள்தான் முழுக் காரணம். ஜெயலலிதாவை விட நீங்கள் பெரிய ஆள் என்று பேச வைத்தீர்கள். விஜயகாந்த், கிருஷ்ணசாமி, சரத்குமார் ஆகியோரை ஏன் கூட்டணியை விட்டு விரட்டினீர்கள். என்னிடம் எந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கவில்லை. தன்னிச்சையாக முடிவை எடுத்தீர்கள். இதனால், தோல்விக்கு நீங்கள்தான் முழு காரணம் என்று சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதற்கு சில தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கூட்டத்தில் அனல் பறந்தது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்க முடியவில்லை. இதனால் மீண்டும் திங்கள்கிழமை (10ம் தேதி) ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்தனர். பின்னர் தலைமைக்கழக நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வந்தனர். இதுவரை எம்எல்ஏக்கள் பொறுமை இழந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடைபெறும் என்பதை மட்டும் தெரிவித்து விட்டு கூட்டத்தை முடித்து விட்டனர்.

 பின்னர் இரு தலைவர்களும் வெளியில் வந்தபோது, தொண்டர்கள் மீண்டும் தங்கள் தலைவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பின்னர் மூத்த தலைவர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்தனர். அங்கும் தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இதனால் தொடர்ந்து பரபரப்பும் பதற்றமும் நிலவியது. கட்சிக்குள் நேற்று நடந்த மோதல் தலைவர்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் தனது வீட்டுக்குச் சென்ற எடப்பாடி பழனிச்சாமி, மூத்த தலைவர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: