8 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் சென்னை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தவிர்த்து வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பதிவானது. இதனால், 5 ஏரிகளும் முழுவதுமாக நிரம்பியது. இதனால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்டு வந்த கிருஷ்ணா நீரை தற்காலிகமாக நிறுத்துமாறு பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டன.இந்த நிலையில் 4 ஏரிகளிலும் முழுவதுமாக நிரம்பியதால், சென்னை மாநகரின் குடிநீருக்கு 62 ேகாடி லிட்டருக்கு பதிலாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கத்தால் ஆவியாதல் காரணமாகவும், தொடர்ந்து தண்ணீர் விநியோகித்து வருவதால் ஏரிகளில் உள்ள நீர் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1004 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 688 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2978 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2960 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை-தேர்வாய்க்கண்டிகை நீர் தேக்கத்தில் 451 மில்லியன் கன அடி  என மொத்தம் 8081 மில்லியன் கன அடி (8.08 டிஎம்சி) நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து மே மாதம் இறுதியில் 4 டிஎம்சி நீர் வரை திறந்து விட ஆந்திர நீர்வளத்துறை சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை மாதத்துக்கு 1 டிஎம்சி தான். ஆனால், தற்போது 8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதால் 8 மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும், கண்டலேறு அணையில் தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில் மாநகரின் குடிநீர் தேவையை இந்தாண்டு பூர்த்தி செய்வது எந்த வித பிரச்னையும் இருக்காது. இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை.

Related Stories:

>