கொரோனாவுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்போடு பணி செய்யும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: சட்டப்போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடங்கியது முதல், அரசு மருத்துவர்கள் ஓய்வின்றி உழைப்பதை அனைவரும் அறிவர். ஆனால் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது தான் வருத்தமளிக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வேண்டும் என்று முந்தைய அரசிடம் நாம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளோம். அத்துடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகவே நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு முதன்முறையாக டிஏசிபி எனப்படும் காலம் சார்ந்த ஊதியத்தை அளித்தது திமுக ஆட்சியில் தான். அதற்கு பிறகு இத்தனை ஆண்டுகளாக அரசு மருத்துவர்களுக்காக யாரும், எதுவுமே செய்யவில்லை.எனவே திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், நீண்ட கால ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என மருத்துவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: