கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பலி தகன மேடைகளில் தொடர்ந்து எரிக்கப்படும் சடலங்கள்: திருவனந்தபுரத்தில் 2 நாட்கள் காத்திருக்கவேண்டும்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மயானங்களில் உள்ள தகன மேடைகள் தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கின்றன. திருவனந்தபுரம் மாநகராட்சியில் சடலத்தை எரிக்க 2 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 4ம் தேதி முதல் கேரளா முழுவதும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் நோய் பரவல் மேலும் மேலும் அதிகரிப்பதை தொடர்ந்து, இன்று முதல் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமே காலை 6 முதல் இரவு 7.30 வரை திறக்க அனுமதிக்கப்படும். கேரளாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்புவரை சராசரியாக மரண எண்ணிக்கை 30க்கும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 63 பேர் இறந்தனர்.

ஆனால் கணக்கில் காட்டப்படாமல் பல மரணங்கள் நிகழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல மயானங்கள் நிரம்பி வழிகின்றன. வட மாநிலங்களில் நடப்பது போல், மொத்தமாக உடல்களை எரிக்கும் நிலை கேரளாவிலும் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உடல்களை தகனம் செய்ய 2 நாட்கள் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தைக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு ெசாந்தமான மயானத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் விறகை பயன்படுத்தி உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 24 உடல்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். தற்போது அதிகமான உடல்கள் வருவதால் தகனம் செய்ய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சமுதாய தகன மேடைகளை பயன்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

Related Stories:

>