கர்நாடகாவுக்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்க வேண்டும் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது: மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கர்நாடகா மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய முந்தைய  உத்தரவில் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம்,  இதுதொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு  ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கடந்த சில வாரங்களாக   ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளுக்கு ஆபத்தான நிலையில் கொரோனா நோயாளிகள் வந்தாலும், அவர்களை  அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகங்கள் மறுத்து வருகின்றனர்.  இந்த நிலையில்  கர்நாடகா மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சனையை தீர்த்து  மக்களை காக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம்,  ‘ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் என்ற விகிதத்தில் உடனடியாக  வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது’. இந்த நிலையில்  மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி  டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா  வாதத்தில்,” கர்நாடக மாநிலத்திற்கு என தற்போது நாள் ஒன்றுக்கு 965 மெட்ரிக்  டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. அவர்களின் தேவை மற்றும் அங்கிருக்கும்  சூழலை கருத்தில் கொண்டு நாங்களே அதனை உயர்த்தி வழங்குவோம். அதனால் இந்த  விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும் பட்சத்தில் எந்த வேலையும் நடைபெறாமல்  அப்படியே தேங்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  

ஏற்கனவே  சென்னை, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் இதேபோன்று ஆக்சிஜன்  அளவை உயர்த்தி வழங்குமாறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்துக்  கொண்டிருக்கிறார்கள். அதனால் இதில் நீதிமன்ற தலையீடு இல்லாமல் இருப்பது  நல்லதாகும். மேலும் இருக்கும் ஆக்சிஜன் பிரச்னைகள் குறித்து நாங்களே  சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி சரிசெய்து கொள்கிறோம் என  தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த  விவகாரத்தை பொருத்தமட்டில் கர்நாடகா உயர்நீதிமன்றம் தனது அத்தனை  அதிகாரங்களையும் பயன்படுத்தி பல வகைகளில் ஆலோசனை நடத்திய பின்னர் தான்  மாநில மக்களின் நலனை அடிப்படையாக் கொண்டு மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து  இருக்கிறது.

இதில் ஒரு மாநிலத்தின் மக்கள் கொரோனா நோய் தொற்றால் கடுமையாக  பாதிக்கப்பட்டும், அதேபோன்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தும் வரும்  சூழலில் உயர்நீதிமன்றங்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு எப்படி  அமைதியாக இருக்க முடியும். உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில்  தலையிடவோ, அதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கவோ நாங்கள்  விரும்பவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக வழங்கிய  உத்தரவின் அடிப்படையில் நோய் தொற்று கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன்  பற்றாக்குறையை தீர்த்து வைப்பது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும்  உடனடியாக சரிசெய்ய முன்வர வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதிகள்,  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு  மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories:

>