சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் இருந்து டெல்லி வந்த மருத்துவ பொருட்கள்

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் இருந்து மருத்துவ பொருட்கள் ஏற்றிய விமானங்கள் நேற்று டெல்லி வந்தன. கொரோனா இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா என ஏராளமான நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பி உதவி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் இருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றிய விமானங்கள் டெல்லி வந்தன. நெதர்லாந்தில் இருந்து 449 வென்டிலேட்டர்கள், 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஏற்றிய விமானம் நேற்று காலை டெல்லி வந்தது.

இதேபோல் சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 வென்டிலேட்டர்கள் மற்றும் இதர மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் என 13 டன் உதவி பொருட்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலந்தில் இருந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானத்தில் நேற்று காலை டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.

Related Stories: