உலகிலேயே அதிக உயிரிழப்புக்கள் 10 நாட்களில் 36,110 பேர் கொரோனாவுக்கு பலி: ஒரு மணி நேரத்துக்கு 150 பேர் மரணம்

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4.14லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.

* ஒரே நாளில் மொத்தம் 3,927 பேர் உயிரிழந்துள்ளனர்.

* 13 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

புதுடெல்லி:  நாட்டில் கடந்த 10 நாட்களில் மொத்தம் 36,110 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். சராசரியாக ஒரு மணி  150 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமடைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4.14லட்சம் பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையானது 2,14,91,598 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மொத்தம் 3,927 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 2,34,083 ஆக  உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக நாட்டில்  நாள்தோறும் 3000த்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன. உலகில்  எந்த நாட்டைவிடவும் தொடர்ச்சியாக 10 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புக்கள் இந்தியாவில் பதிவாகி இருக்கின்றது. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 150 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே இது தான் அதிகபட்சமாகும். முன்னதாக அமெரிக்காவில் 10 நாட்களில் 34,798 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 32,692 இறப்புக்கள் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இதே காலகட்டத்தில் மெக்சிகோ மற்றும் இங்கிலாந்தில் முறையே 13,897 மற்றும் 13,266 பதிவானது.

நாட்டில் மொத்தம் 13 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதேபோல் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகபட்ச உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. 13 மாநிலங்களில் ஒன்றான குறைந்த மக்கள் தொகை கொண்ட உத்தரகாண்டில் 151 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலமானது தொடர்ந்து கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்து வருகின்றது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 853 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகாவில் 300க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களும், சட்டீஸ்கரில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும் இறந்துள்ளனர்.  தமிழ்நாடு -195.,ராஜஸ்தான் 161, மேற்கு வங்கம் 117, கேரளா, 63, ஜம்மு மற்றும் காஷ்மீர் 5.

Related Stories:

>