கொரோனா பாதித்த நோயாளி மனைவி மடியிலேயே உயிரைவிட்ட பரிதாபம்

சித்தூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ரயில் நிலையத்தில் மூச்சுத்திணறல் அதிகரித்ததால் மனைவி மடியிலேயே உயிரைவிட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மிட்டூர் கிராமத்தில் கடந்த வாரம் செவிலியர்கள் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவுகள் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(60) என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து செவிலியர்கள் சந்திரசேகர் குடும்பத்திற்கு செல்போன் மூலம் ெதாடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

அப்போது, ெகாரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு சந்திரசேகருக்கு வசதியில்லை. இதனால், சந்திரசேகர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அவருக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சந்திரசேகரை அழைத்து சென்றனர்.

இதற்காக குப்பம் ரயில் நிலையத்தில் சந்திரசேகர், அவரது மனைவியுடன் காத்திருந்தபோது, சந்திரசேகருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துபோன சந்திரசேகர் மனைவி சிறிது நேரத்தில் ரயில் வந்து விடும், நாம் பெங்களூருவுக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி விடலாம் என ஆறுதல் கூறி தண்ணீர் குடிக்க வைத்தார். அப்போது,  மனைவியின் மடியிலேயே சந்திரசேகர் மூச்சுத்திணறலால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி மடியிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தது ரயில் நிலையத்தில்  இருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories: