கோவையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு: பதற்றத்தில் தனியார் மருத்துவமனைகள்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கம் தினசரி 2 ஆயிரத்தை கடந்து விட்டது. இறப்பும் கணிசமாக அதிகமாகி விட்டது. இதுவரை மாவட்ட அளவில் 736 பேர் இறந்து விட்டனர். இதுவரை 86,261 பேர் நோயில் பாதிக்கப்பட்டனர். 76,206 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டனர். 9,318 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட அளவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன் தினம் வரை 6,563 படுக்கை வசதிகள் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் இடமில்லை எனக்கூறி நோயாளிகளை காத்திருக்க வைப்பதும், வீட்டிற்கு அனுப்புவதும் அதிகமாகி விட்டது. தனியார் மருத்துவமனைகளில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. நகரில் 20க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ‘கோவிட் வார்டு’ காலியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில தனியார் மருத்துவமனைகளில் தனியார் ஓட்டல், லாட்ஜ்களை தற்காலியாக மருத்துவமனையாக மாற்றி சிகிச்ைச அளித்து வருகிறது. அப்போதும் படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது. திருப்பூர், ஈரோடு, கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவைக்கு சிகிச்சை வருவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர போதுமான வசதியில்லை. மேலும் மேலும் நோயாளிகள் வந்தால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கைவிரிக்கும் சூழல் நிலவுகிறது.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. 70 சதவீத நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சுவாசம் ேதவைப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதால், ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் என்ன செய்வது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் பதட்டத்தில் இருக்கிறார்கள். மாவட்ட அளவில் சிறிய அளவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளிலும் ‘கோவிட் வார்டு’ துவக்கப்பட்டுள்ளது.

போதுமான இட வசதி, படுக்கை இல்லாத நிலையில் இங்கேயும் நோயாளிகளை சேர்க்க மறுத்து வருகின்றனர். தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘இந்த அளவிற்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சிலர் நோய் அறிகுறி தென்பட்டதும் சிகிச்சைக்கு வருகிறார்கள். இன்னும் இரு மாதத்திற்கு நோய் தாக்கம் உச்சத்தில் இருக்கும். நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகமாக தேவைப்படும். சிகிச்சை தரவேண்டிய டாக்டர்கள், நர்சுகளின் தேவையும் அதிகமாகி விடும். குறைந்த அளவு வசதிகளை கொண்டு அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை தருவது இயலாத காரியம்’’ என்றனர்.

சுகாதாரத்துறை அலட்சியம்

மதுக்கரை அரசு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் கடந்த 2019ம் ஆண்டில் துவக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த மையம் மூடி கிடக்கிறது. அனைத்து வசதிகளும் கொண்ட 24 மணி நேர சிகிச்சை வசதி கொண்ட இந்த மையம் மூடப்பட்டதால் நோயாளிகள் தவிப்படைந்துள்ளனர். தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, வாளையார், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் அரசு துறை சார்பில் துவக்கப்படவில்லை. கொரோனா சிகிச்சையை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை முயற்சிக்காமல் அலட்சியமாக இருப்பதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: