மு.க.ஸ்டாலினின் முதல் அதிரடி!: தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்..!!

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு, 2019ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து, தலைமை செயலாளராக அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.  

ராஜீவ் ரஞ்சனுக்கு 3 மாத பதவிக்காலம் இருக்கக்கூடிய நிலையில், தலைமை செயலாளர் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் தனி செயலாளர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 

தற்போதுள்ள சூழலில் அரசு நிர்வாகம் துரிதமாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு துறைகளில் இறையன்பு ஐ.ஏ.எஸ். செயல்பட்ட போது அத்துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் என்பது நினைவில்கூறத்தக்கது. 

இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் கொண்டிருக்கும் இறையன்பு, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஊக்கசக்தியாக திகழ்ந்து வருகிறார். இளைஞர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுது வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories: