ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ்: அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்; அதிமுக கட்சி விதியின் படி பொதுச்செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் இந்த விதியை திருத்த முடியாது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்த பொதுக்குழு, சேர்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சொத்து வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணைந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்க கூடிய இரட்டை தலைமை உறுப்பினர்களை உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றும் 2014-ல் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவடைந்துவிட்டதால் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் பதிலளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதி அளித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கட்சியின் விதிகளுக்கு முரணாக இந்த புதிய விதியின் படி செயல்பட கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பழைய விதிகளின் படியே கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கட்சியின் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவை தலைவர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம்; அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோர் ஜூலை 7-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: