அமைச்சர் பதவி கிடைக்காததில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை!: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: அமைச்சர் பதவி  கிடைக்காததில் வருத்தம் எதுவும் இல்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றுள்ளார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பின்னர்  33 அமைச்சா்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். 

கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவரின் புதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் நடந்த திமுக அமைச்சரவை பதவியேற்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்கள் கட்சியின் தலைவர் தகுதியும், திறமையும் வாய்ந்த அமைச்சரவையை தேர்வு செய்திருப்பதாக தெரிவித்தார். 

மேலும் அமைச்சர் பதவி  கிடைக்காததில் வருத்தம் எதுவும் இல்லை. அமைச்சர் பதவி குறித்து தலைவர் முடிவு செய்வார். கட்சி நிர்வாகிகள் அதை முடிவு செய்வர். திராவிட பாரம்பரியத்தை பின்பற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். கொரோனா பேரிடரை அரசும் அதிகாரிகளும் திறமையாக எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: