தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பர்லியார்(நீலகிரி) 14 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வருகிற 29-ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடையும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதல் நகரங்களில் வெப்பம் அதிகரித்து உள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறியது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை விட அதிகமாக இருக்கும் என தெரிவித்தது.

Related Stories: