செம்பட்டி ரவுண்டானாவில் பால பணி படுமந்தம்-வாகனஓட்டிகள் அவதி

சின்னாளபட்டி : செம்பட்டி ரவுண்டானாவில் தரைப்பால பணி மந்தகதியில் நடந்து வருவதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. செம்பட்டி ரவுண்டானா அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் கழிவுநீர் செல்வதற்கு வாய்க்காலுடன் கூடிய தரைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2 மாத காலமாகியும் பாலம் கட்டும் பணி நிறைவடையாததால் பாலம் அருகே கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் பெருகுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தவிர செம்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கமாக கோவை- பழநி செல்லும் வாகனங்களும், திண்டுக்கல் மார்க்கமாக வரும் வாகனங்களும் திரும்பி செல்வதில் சிரமம் ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் ஒருபகுதியை மட்டும் கட்டி விட்டு வடக்குப்புற பகுதியில் பள்ளம் தோண்டி போட்டுள்ளனர்.

இதனால் இரவுநேரங்களில் வாகனங்கள் திரும்பும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக மழை நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: