கொரோனா ஊரடங்கால் 12 மணிக்கு மேல் கடைகள் முழு அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாட்டமின்றி முழுமையாக முடங்கியது.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நேற்று முதல் மதியம் 12 மணி ஊரடங்கு தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை நகர்ப்புறங்களில் மட்டும் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் இருந்தது. நகர்ப்புறங்களில் போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் ஒலி பெருக்கி மூலம் சாலைகள், முக்கிய தெருக்களில் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டனர்.

மளிகை, பால், காய்கறி, மெடிக்கல்கள், சில இடங்களில் டீக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது. இக்கடைகள் மற்றும் மளிகை, காய்கறி கடைகள் பகல் 12 மணியுடன் அடைக்கப்பட்டது. சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார் மற்றும் அலுவலர்கள் அடைக்க வலியுறுத்தினர். மக்கள் புழக்கம் இல்லாததால் பல ஹோட்டல்கள் திறக்கப்படவில்லை. இதனால் நகரங்களின் முக்கிய பகுதிகள், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. சுமார் 90 சதவீத மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மிகக்குறைவான வாகன போக்குவரத்துடன் காணப்பட்டன. வழக்கமான கூட்டம் இல்லாமல் அரசு பஸ்கள் இயங்கியது. கிராமப்புறங்களிலும் பெரும்பாலும் இதே நிலையே காணப்பட்டது. கிராமங்களில் உள்ள தெருக்களில் மட்டும் மக்கள் நடமாட்டம் இருந்தது.

அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. பொதுமக்கள் நடமாட்டமின்றியும், வாகனங்கள் போக்குவரத்தின்றியும், கடைகள் அடைக்கப்பட்டும் மாவட்டம் முழுமையாக முடங்கியது.

Related Stories: