கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல் ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தம்

ஈரோடு : கொரோனா  புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து ஈரோட்டில் 50 ஆயிரம்  விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள்  தெரிவித்துள்ளனர்.ஈரோடு, வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம்,  சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள்  ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஸ்டிரா,  குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு  அனுப்பபட்டு வருகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்  அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளி ஆர்டர்கள் ஈரோடு  விசைத்தறியாளர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஏற்கனவே உற்பத்தி  செய்த ஜவுளிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.200 கோடி  மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உற்பத்தி  பாதியாக குறைக்கப்பட்டு நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள்  உற்பத்தியாகும் இடத்தில் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி  செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள்  அமல்படுத்தப்பட்டுள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் வருகிற  20ம் தேதி வரை முழு உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். இது குறித்து  தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர்  கந்தவேல் கூறியதாவது:

 தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏற்கனவே கடந்த  மாதம் 20ம் தேதி முதல் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்து  விட்டோம். நேற்று முதல் மேலும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு  அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து தொழிலாளர்களையும்,  உரிமையாளர்களையும் காக்கும் வகையில் வரும் 20ம் தேதி  வரை முழுவதுமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் வட  மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் ஆர்டர்களும் வருவது  தடைபட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்டர்கள் ரூ. 200 கோடி மதிப்பிலான  துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம்  நாளொன்றுக்கு ரூ.7 முதல் ரூ.10 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்படும். இவ்வாறு  கந்தவேல் கூறினார்.

Related Stories: