மாவட்டத்தில் 15,000 கடைகள் மூடல்

ஈரோடு :  ஈரோடு  மாவட்டத்தில் கொரோனா புதிய கட்டுப்பாட்டால் நேற்று முதல்  15,000க்கும்  மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதாக வியாபாரிகள்  தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக   அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்தும் வகையில், எங்கள்   கூட்டமைப்பின் கீழ் உள்ள சங்கங்கள், அதன் உறுப்பினர்கள் என 15,000க்கும்   மேற்பட்டோர் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க   வணிகர்கள் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். அரசு அறிவித்த நேரத்தில் காய்கறி, மளிகை, டீக்கடை போன்றவை செயல்படும்.விளை பொருட்கள்   உட்பட உணவு பொருட்கள், மொத்த விற்பனை இடங்களுக்கு கொண்டு செல்லுதல்,   குடோன்களில் இறக்கி, ஏற்றுதல் போன்ற பணிகள் நடக்கும்.கடைகள்   அடைக்கப்பட்டுள்ளதால் தினமும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம், பண பரிமாற்றம்   பாதிக்கும். ஆனாலும் வேறு வழியில்லை. இந்த இழப்புகளை ஏற்றுக்கொண்டு   அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். இவ்வாறு கூறினார்.

சத்தியமங்கலம்:  இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகர்ப்பகுதியில் நேற்று காய்கறி மளிகை உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் பயணிகள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டபோதும், பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான பேருந்துகளில் பத்துக்கும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் கோவை சாலை, சத்தியமங்கலம் சாலை, பவானிசாகர் சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேரக் கட்டுப்பாடு காரணமாக மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் முழு ஊரடங்கு போல மக்களும் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: