குழந்தைகளை தாக்கும் கொரோனா 3வது அலை நவம்பர், டிசம்பரில் பரவ வாய்ப்பு-நிபுணர்கள் கணிப்பு

புதுடெல்லி : கொரோனா 2வது அலையுடன் நாம் போராடிக் கொண்டிருக்கையில், 3வது அலை நவம்பர் அல்லது டிசம்பரில் தாக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அது குழந்தைகளை அதிகளவில் தாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.கொரோனா முதல் அலையைக் காட்டிலும் 2வது அலை தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி விட்டது. பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி விட்டது. 2வது அலை இவ்வளவு தீவிரமாக இருப்பதால், மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறி உள்ளார். 3 அலை பாதிக்கக் கூடும் என பல நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், 3வது அலை எப்போது தாக்கும் என்பதே மக்கள் மத்தியில் எழும் பெரும் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து தொற்றுநோயியல் நிபுணரும், பேராசிரியருமான டாக்டர் கிரிதர் பாபு கூறுகையில், ‘‘பெரும்பாலும் 3வது அலை குளிர்காலத்தில் பரவ வாய்ப்புள்ளது. நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் 3வது அலை பரவலாம். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக 3வது அலை பரவும் என்பதால் அதற்குள் அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்’’ என்றார்.

முதல் 2 அலையில் முதியவர்களும், நடுத்தர வயதினருமே பாதிக்கப்பட்ட நிலையில், 3வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசின் கணித முறையில் தொற்றுநோயை கணிக்கும் நிபுணரான வித்யாசாகர் கூறுகையில், ‘‘தற்போது 2வது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர்.

ஆனாலும், அந்த நோய் எதிர்ப்பு 6 மாதத்திற்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும். நமக்கு டிசம்பர் மாதம் வரை அவகாசம் உள்ளது. எனவே அதற்குள் அதிகப்படியான நபர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் 3வது அலையின் பாதிப்பை குறைக்கலாம். பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் 2வது அலையைப் போன்ற கோர பாதிப்பை எதிர்கொள்ளாமல் இருக்க முடியும். குழந்தைகளுக்கு ஏற்கனவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால் கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது’’ என்றார்.

கொரோனா 2வது அலை மே 7ம் தேதி உச்சத்தை எட்டும் எனவும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி இன்று பாதிப்பு அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது. இதிலிருந்து படிப்படியாக குறைந்து இம்மாத நடுவில் பெருமளவில் சரி வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் தடுப்பூசி போடும் பணி, ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்குதல், சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் 3வது அலையின் தீவிரத்தை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 17 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2.30 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையால் இப்பணி மிகவும் தடைப்பட்டுள்ளது. இதை விரைவுபடுத்தி அதிகளவில் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அறிகுறி இல்லாமல் தாக்கும் புது பாதிப்பு

கொரோனா 2வது அலையில் இளம் வயதினருக்கு அறிகுறியே இல்லாமல் புதிய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பாதிப்புக்கு ஹேப்பி ஹைப்போக்சியா என பெயரிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் குறைந்த ஆக்சிஜன் அளவு இருப்பது ஹைப்போக்சியா எனப்படுகிறது.  நல்ல ஆரோக்கியமுள்ள நபருக்கு ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் அளவு 95%க்கு கூடுதலாக இருக்கும்.

ஆனால், இளம் வயது கொண்டோரை அதிகம் தாக்கும் ஹேப்பி ஹைப்போக்சியா பாதிப்பால், நோயாளிகளுக்கு தங்களுடைய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போனதே தெரியாமல் இருக்கும். இவர்கள் கொரோனா அறிகுறிகள் எதுவும் உணராமலேயே தங்களுடைய அன்றாட பணிகளை தொடர்ந்து செய்து வருவார்கள். ஆனாலும் இவை சத்தமில்லாமல், நுரையீரல்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும்.  ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே 40%க்கு கீழ் சென்று ஆபத்து நிலையை அடையும்.  அதன்பின்னரே நோயாளிக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது இளம் வயதினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: