சம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை!

நன்றி குங்குமம் தோழி

எப்போதும் இல்லாத அளவில் பெண்கள் இந்த நூற்றாண்டில்தான் வேலைக்குச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆண்களுக்குச் சமமாக பெண்கள் உழைத்தாலும், திருமணம், குழந்தை என்றானதும் வேலையை விடும் சூழலுக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள். மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதாலே, பெண்களை பணியில் அமர்த்த நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.

மகப்பேறு காலங்களில், 6 மாத காலம் வீட்டிலிருந்தால்தான், தாய்-சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தமிழக அரசு, ெபண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 9 மாதமாக நீடித்திருக்கும் நிலையில், ஆண்களுக்கு எந்த மாற்றமும் வரவில்லை. சில நிறுவனங்கள், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியிருக்க, IKEA, பர்னீச்சர் நிறுவனம், தந்தைக்கும் 6 மாத கால விடுமுறையை அறிவித்திருந்தது.

அதுவும் மனைவியின் விடுமுறைக்கு பிறகு தான் எடுக்க முடியும். அதனை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட்டும் 6 வார விடுமுறை திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால், பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேடோ (zomato) இதில் ஒரு பெரும் புரட்சி செய்திருக்கிறது.

நாடு முழுதும் உள்ள தனது ஊழியர்களுக்கு 26 வார சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு சலுகையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதனுடன் ரூபாய் 70 ஆயிரம் குழந்தை பராமரிப்பிற்காக அளிக்கவுள்ளது.

இது ஆண்கள் மத்தியில் பெறும் வரவேற்பை கூட்டியுள்ளது. தந்தையருக்கான 26 வார மகப்பேறு விடுமுறை, இந்தியாவில் அரசு வேலையில் இருக்கும் ஆண் ஊழியர்களின் விடுமுறை நாட்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை பிள்ளை பெற்றுக்கொள்ளும் தாய், தந்தை மட்டும் இல்லாமல், தத்தெடுக்கும் பெற்றோர்கள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுபவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குமே தன் குடும்பமும் வேலையும் முக்கியமானது. இரண்டிற்குமே சரி சமமான கவனமும் நேரமும் செலுத்த முடியாமல் போவதால்தான் இங்கு பிரச்சனைகளே உருவாகின்றன. வீட்டில் கடமையை செய்ய நேரமில்லாமல் போகும் போது, வேலையிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.

முக்கியமாக இளைய சமூகத்தினர், தங்களின் குழந்தையின் முக்கிய தருணங்களை உடனிருந்து ரசிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனை கொண்டு WHO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10% கர்ப்பிணிகளும், 13% புதிய தாய்மார்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், குழந்தை பெற்றபின், கணவர்களும் வீட்டிலிருந்தால், பெண்கள் சீக்கிரம் உடல்நலம் தேறி ஆரோக்கியமாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளது.

குழந்தை வளர்ப்பில் இருவருக்கும் சம உரிமையும் பொறுப்பும் இருக்கிறது. இதை உணர்ந்து பல நாடுகள் தந்தைகளுக்கும் மகப்பேறு விடுமுறையை அமல்படுத்தி வருகிறது. 2016ல், Global Parental Report வெளியிட்ட ஆய்வின் முடிவில், உலகிலேயே ஆண்களுக்கும் சட்டரீதியாக மகப்பேறு விடுமுறை அளிக்கும் பத்து நாடுகளில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.சோமேடோவின் இந்த புதிய முயற்சி குழந்தை வளர்ப்பில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.                   

ஸ்வேதா கண்ணன்

Related Stories: