பெரியார், அண்ணா,கலைஞர், க.அன்பழகன் : அரசியல் ஆசான்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழக முதல்வராக பதவியேற்றத்தைத் தொடர்ந்து தலைவர்களின் நினைவிடங்களுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து 33 தமிழக அமைச்சர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக தனது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கிருந்த அவரின் தந்தை கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி கண்கலங்கிய நிலையில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.இதையடுத்து, கோபாலபுரத்திலிருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களும் உடன் சென்றனர். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு திராவிட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்ற நிலையில் பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வீட்டுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>