வெப்ப சலனம் நீடிப்பு: 10 மாவட்டங்களில் இடியுடன் மழை

சென்னை: தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக வெப்பச் சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. தற்போது உள் கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய உள் தமிழகம் வரை 1 கிமீ  உயரத்தில் காற்று சுழற்சி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,

தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். இந்த நிலை 10ம் தேதி வரை நீடிக்கும். தற்போது காற்றின் இயல்பான வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். மேலும், 11 மற்றும் 12ம் தேதிகளில் வட மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்ப நிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும். சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டம் காணப்படும். நகரில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Related Stories: