மருத்துவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக கூடுதல் இடங்களில் நோய் வகைப்படுத்துதல் மையம்: கலெக்டர் தகவல்

தாம்பரம்: தாம்பரம் காசநோய் மற்றும் தாம்பரம் அரசு சித்த மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தற்போது  நோய் வகைப்படுத்தும் மையம் செயல்படுகிறது. அதை மேலும் விரிவுபடுத்துவதற்காக, குரோம்பேட்டை மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, அங்கு வரகூடிய நோயாளிகளை அருகில் இருக்கும் சானடோரியம் மருத்துவமனையில் மாற்றி, நோய் வகைப்படுத்தும் மையத்தை தயார் நிலையில் வைத்துள்ளோம். அது இன்று முதல் செயலுக்கு வரும்.

இந்த நோய் வகைப்படுத்தும் மையத்தில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற விரும்புவர்களுக்கு அருகில் உள்ள சித்த மருத்துவ மனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. நோய் தொற்று உள்ளவர்கள் அங்கு சென்று சிகிச்சை பெறலாம். தேவைக்கு ஏற்ப படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல அலோபதி மருத்துவ முறையில், மருந்துகள் ஏற்கனவே தாம்பரம் காச நோய் மருத்துவமனையில் உள்ளன. மேலும், ஆக்சிஜன் படுக்கைகளும் இருக்கிறது.  அவசர சிகிச்சை மற்றும் வென்டிலேட்டர் தேவைப்படுவோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.  தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளான்ட் இருக்கிறது. அதை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்லாவரம் பகுதியில் இருக்கக்கூடிய கன்டோன்மென்ட் மருத்துவமனை நோய் வகைப்படுத்தும் மையமாக இன்னும் ஓரிரு நாட்களில் மாற்றப்படும். அங்கிருந்து நோயாளிகள் கோவிட் கேர் சென்டர் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தபடுதல், மருத்துவமனைக்கு தேவையின் அடிப்படையில் செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 2800 படுகைகள் தயார் நிலையில் இருக்கிறது. சேலையூர் பாரத் கலை அறிவியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் 608 படுக்கைகள், வி.ஐ.டி மாம்பாக்கத்தில் 900 படுக்கைக்ள், தையூர் தொழிலாளர்கள் விடுதியில் 1000 படுக்கைகள், மாமண்டூர் மதுராந்தகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 55 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக கொரோனா சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நோயின் தாக்கத்திற்கு ஏற்ப மற்ற இடங்களில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம். நோயாளிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சிகிச்சைக்காக கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சானடோரியம் காசநோய் மருத்துவமனையில் உள்ள பிளான்ட்டில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Related Stories: