மாநகர மேயராக இருந்த போது சிங்கார சென்னையாக மாற்றிய சிற்பி மு.க.ஸ்டாலின்

* உள்ளாட்சித்துறையில் நல்லாட்சி தந்தார்

* திமுக ஆட்சிக்காலத்தில் மத்தியஅரசின் விருதுகளை அள்ளிய தமிழகம்

* உச்சநீதிமன்றத்தின் பாராட்டு பெற்ற தலைவர்

சென்னை மாநகர மேயர் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். கடந்த 1996ல் மாநகர் மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. அவர், 5 ஆண்டுகள் செய்த சாதனைகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. பீட்டர்ஸ் சாலை -கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை -வெஸ்ட்காட் சாலை சந்திப்பு, பாந்தியன் சாலை - காசா மேஜர் சாலை சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை - ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை - ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பு, டி.டி.கே.சாலை - சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை - டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை - காந்தி மண்டபம் சாலை சந்திப்பு ஆகிய 10 இடங்களில் மேம்பாலங்களை கட்டி திறந்து வைக்கப்பட்டன.  மேயராக செய்த சாதனைகளுக்காக “நவீன சென்னை மாநகரத்தின் தந்தை” என்று போற்றப்பட்டார் மு.க. ஸ்டாலின். சிங்கார சென்னை என்ற முழக்கத்தை முன்னெடுத்து அதை மக்களிடையே பரவலாக்கினார். சென்னை நகரத்தின் சாலைகள் புதுப்பொலிவு பெற்றன.

மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பாலும், சாதனைகளின் பலனாகவும் 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டாலினின் சாதனைகளையும், வளர்ச்சியையும் பொறுக்க முடியாத ​ஆளும் கட்சி, ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை கொண்டு வந்த காரணத்தினால், தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற உறுப்பினராக தனது பணியினை தொடர்ந்தார். திமுக 2006ல் ஆட்சி பொறுப்பேற்ற போது, உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், அவர் ஆற்றிய அரும்பணிகளால் அரசாங்கத்திற்கு பல விருதுகள் மற்றும் பாராட்டுகள் கிடைத்தன. உள்ளாட்சி துறை அவர் காலத்தில் மிகப் பெரிய சாதனைகள் புரிந்தது. அவர் அமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்தில் 12,618 கிராம ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 32 மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 716 ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் (மதுரை மாவட்டம்), கொட்டக்கச்சியேந்தல் (விருதுநகர் மாவட்டம்) ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஊர்களுக்கு நடத்தப்பட்ட தேர்தல்களில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், கிராம சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை அழைத்து சென்னையில் முதலமைச்சர் தலைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2006ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சமத்துவப் பெருவிழா நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும் சிறப்பான மற்றும் புதுமையான முயற்சிகளை செயல்படுத்தும் 15 கிராம ஊராட்சிகளை சிறப்பிக்கும் வகையில் உத்தமர் காந்தி விருது வழங்கும் திட்டம் 2006ம் ஆண்டு முதல் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டது

நவம்பர் முதல் நாள் உள்ளாட்சி அமைப்புகள் தினம் என கடந்த 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய ரூ.793 கோடி கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. 2010 ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,030 கோடி கூடுதலாக வழங்கப்பட்டது.

ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதற்காக தமிழக அரசுக்கு இந்தியாவில் மூன்றாவது இடம் வழங்கப்பட்டது. அதற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. 2007 -2008ம் ஆண்டு 8 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 17 பேரூராட்சிகளில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் அமைத்து தரப்பட்டன. மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் ஆகிய மாநகராட்சிகள் தரம் உயர்ந்தப்பட்டன. ரூ.200 கோடி செலவில் 10,100 பஞ்சாயத்துகளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 125 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சுனாமி பாதித்த திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் 2630 வீடுகள் சுமார் 63 கோடி மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கட்டித் தரப்பட்டன.

இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும் குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதினை கடந்த 2011 பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு பெற்றது. 2008-2009 தமிழக ஊராட்சிதுறை இந்தியாவில் மூன்றாவது இடத்தைப் பெற்று ரூ.1.50 லட்சம் ரொக்கப் பரிசை வென்றது.2009-2010ம் ஆண்டு இரண்டாவது இடத்தைப் பெற்று ஒன்றரை கோடி பரிசை வென்றது.

2006-2007 ஆம் ஆண்டு தமிழக ஊராட்சி துறை இந்தியாவின் முதல் சிறந்த ஐந்து இடங்களில் ஒன்றை பெற்று ரூ.86 லட்ச ரொக்கப் பரிசை வென்றது. திறமையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டதற்காக தமிழக ஊராட்சித் துறை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கிய முதல் பரிசினையும் ரூ.1 கோடி ரொக்க பரிசினையும் 2007-2008ம் ஆண்டு தமிழக ஊராட்சித்துறை பெற்றது.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை தமிழ்நாடு மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று உச்சநீதிமன்றம் பாராட்டியதோடு மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துக் கூறியது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2007-2008ம் ஆண்டு கடலூர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களும், 2008-2009ம் ஆண்டு நாகப்பட்டிணம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் 2009-2010ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு புதுடில்லியில் நடந்த அரசு விழாவில் அம்மாவட்டங்களுக்கு இந்தியாவில் சிறந்த மாவட்டங்களுக்காகன தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை மாநகர மேயராக இருந்த போதும் சரி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போதும் சரி திறந்தபட செயலாற்றி சாதித்தார். இதனால், தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவரே என்று பாராட்டி மகிழ்கின்றனர். மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமையால் தான் பல திட்டங்களையும் 5 ஆண்டுகளில் முடித்து மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளார்.

Related Stories: