தமிழகத்தில் காங்கிரஸ்தான் 3வது பெரிய கட்சி: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிதான் 3வது பெரிய கட்சி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்தியிலும், மாநிலத்திலும் நடந்து வந்த மக்கள் விரோத பா.ஜ.., அ.தி.மு.க. ஆட்சிகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் கடந்த மக்களவை தேர்தலில் 39 இடங்களில் 38ல் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணிக்கு 60 லட்சம் வாக்குகள் அதிகமாக அளித்து தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வெற்றி பெறச் செய்தனர்.

சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி பெறச் செய்து தமிழகத்தில் நடைபெற்று வந்த பா.ஜ. ஆதரவு பெற்ற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ளது.  அனைத்து நிலைகளிலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்த தமிழக மக்களுக்கு விடியல் ஏற்படுகிற வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று நல்லாட்சியை அளிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி யார் என்று ஊடகங்களின் மூலமாக பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி 234 தொகுதிகளில் 25  தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 20 லட்சம். இதன்படி ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெற்ற சராசரி வாக்குகள் 80 ஆயிரம்.   

இதனடிப்படையில் தமிழக அரசியலில் தொகுதிகளில் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும்,  ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான்  என்பதை எவரும் மறுக்க முடியாது.   மூன்றாவது அணி என்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலிலும் இதுவரை ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

எனவே, நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், மக்கள் நீதி மய்யமாக இருந்தாலும் ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால் தாங்கள் செல்கிற அரசியல் பாதை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டுமே தவிர,  புதிய வியாக்கியானங்களை வழங்கி தங்களை மூன்றாவது பெரிய கட்சி என்று அழைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Related Stories:

>