இந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு தொற்று: 24 மணி நேரத்தில் 3,980 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 3,980 பேர் பலியாகி உள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் தள கட்சி தலைவருமான அஜித் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்தியாவில் கொரோனா 2வது அலை சுனாமி அலையாக மாறி இருக்கிறது. கடந்த 15 நாட்களாக தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கு அதிகமாக பதிவாகி வருகிறது. கடந்த 1ம் தேதி அதிகபட்சமாக உலகிலேயே முதல் முறையாக ஒரே நாளில் 4  லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். பின்னர் 2 நாட்கள் சற்று குறையத் தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

நேற்று உச்சகட்டகமாக இதுவரை இல்லாத அளவுக்கு 4.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 12  ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி 4 லட்சத்து ஆயிரத்து 993 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

இதே போல ஒரே நாளில் 3,980 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கையும் புதிய உச்சமாக 4 ஆயிரத்தை எட்டியிருப்பது மக்களை பீதி அடையச் செய்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 லட்சத்து 66 ஆயிரத்து 398 ஆக  அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 57,640 பேரும், கர்நாடகாவில் 50,112 பேரும், கேரளாவில் 41,953 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 31,111 பேரும் தமிழகத்தில் 23,310 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கோரத்தாண்டவமாடுகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. தற்போது, இலங்கை அரசும் இந்திய பயணிகளுக்கு தடை  விதித்துள்ளது.

இந்திய பயணிகள் இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் இலங்கை விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கும்  அறிவுறுத்தல்களின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, அமெரிக்க அரசும் தங்கள் நாட்டு மக்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. லெவல்-4 எச்சரிக்கை என்பது  அமெரிக்க மக்கள் பயணம் குறித்த உச்ச கட்ட எச்சரிக்கையாகும். இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்கர்கள், அமெரிக்க அரசு ஊழியர்கள் நாடு திரும்பலாம் எனவும் அறிவித்துள்ளது.

ஸ்பெயினுக்கு சென்ற இந்திய கொரோனா

இந்தியாவில் உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதுகுறித்து ஸ்பெயினின் சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ் கூறுகையில், ‘இந்தியாவுக்கு விமானம் மூலம் ஆக்சிஜன்  உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்கள் ஸ்பெயினிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவில் உருமாற்றமடைந்து இரண்டாம் அலையாக அச்சமூட்டி வருகிறது. உருமாற்றமடைந்திருக்கும் இந்திய வைரஸ்  தொற்று தற்போது ஸ்பெயினிலும் 11 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>