குழந்தைகளை தாக்கும் கொரோனா 3வது அலை: நவம்பர், டிசம்பரில் பரவ வாய்ப்பு: நிபுணர்கள் கணிப்பு

புதுடெல்லி: கொரோனா 2வது அலையுடன் நாம் போராடிக் கொண்டிருக்கையில், 3வது அலை நவம்பர் அல்லது டிசம்பரில் தாக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அது குழந்தைகளை அதிகளவில் தாக்க வாய்ப்புள்ளதாகவும்  கூறப்படுகிறது. கொரோனா முதல் அலையைக் காட்டிலும் 2வது அலை தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி விட்டது. பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி விட்டது. 2வது அலை இவ்வளவு தீவிரமாக இருப்பதால்,  மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறி உள்ளார். 3 அலை பாதிக்கக் கூடும் என பல நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், 3வது அலை எப்போது தாக்கும் என்பதே மக்கள் மத்தியில் எழும் பெரும் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து தொற்றுநோயியல் நிபுணரும், பேராசிரியருமான டாக்டர் கிரிதர் பாபு கூறுகையில், ‘‘பெரும்பாலும் 3வது அலை  குளிர்காலத்தில் பரவ வாய்ப்புள்ளது. நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் 3வது அலை பரவலாம். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக 3வது அலை பரவும் என்பதால் அதற்குள் அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது  அவசியம்’’ என்றார்.

முதல் 2 அலையில் முதியவர்களும், நடுத்தர வயதினருமே பாதிக்கப்பட்ட நிலையில், 3வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசின் கணித முறையில் தொற்றுநோயை கணிக்கும்  நிபுணரான வித்யாசாகர் கூறுகையில், ‘‘தற்போது 2வது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். ஆனாலும், அந்த நோய் எதிர்ப்பு 6 மாதத்திற்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும். நமக்கு டிசம்பர்  மாதம் வரை அவகாசம் உள்ளது. எனவே அதற்குள் அதிகப்படியான நபர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் 3வது அலையின் பாதிப்பை குறைக்கலாம். பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் 2வது அலையைப் போன்ற கோர  பாதிப்பை எதிர்கொள்ளாமல் இருக்க முடியும். குழந்தைகளுக்கு ஏற்கனவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால் கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது’’ என்றார்.

கொரோனா 2வது அலை மே 7ம் தேதி உச்சத்தை எட்டும் எனவும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி இன்று பாதிப்பு அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது. இதிலிருந்து படிப்படியாக குறைந்து இம்மாத நடுவில் பெருமளவில் சரி  வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் தடுப்பூசி போடும் பணி, ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்குதல், சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் 3வது அலையின் தீவிரத்தை குறைக்க முடியும் என  நிபுணர்கள் கூறி உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 17 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18-44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2.30 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையால் இப்பணி  மிகவும் தடைப்பட்டுள்ளது. இதை விரைவுபடுத்தி அதிகளவில் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அறிகுறி இல்லாமல் தாக்கும் புது பாதிப்பு

கொரோனா 2வது அலையில் இளம் வயதினருக்கு அறிகுறியே இல்லாமல் புதிய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பாதிப்புக்கு ஹேப்பி ஹைப்போக்சியா என பெயரிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் குறைந்த ஆக்சிஜன் அளவு  இருப்பது ஹைப்போக்சியா எனப்படுகிறது.  நல்ல ஆரோக்கியமுள்ள நபருக்கு ரத்த ஓட்டத்தில் ஆக்சிஜன் அளவு 95%க்கு கூடுதலாக இருக்கும். ஆனால், இளம் வயது கொண்டோரை அதிகம் தாக்கும் ஹேப்பி ஹைப்போக்சியா பாதிப்பால்,  நோயாளிகளுக்கு தங்களுடைய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து போனதே தெரியாமல் இருக்கும். இவர்கள் கொரோனா அறிகுறிகள் எதுவும் உணராமலேயே தங்களுடைய அன்றாட பணிகளை தொடர்ந்து செய்து வருவார்கள்.

 ஆனாலும்  இவை சத்தமில்லாமல், நுரையீரல்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும்.  ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே 40%க்கு கீழ் சென்று ஆபத்து நிலையை அடையும்.  அதன்பின்னரே நோயாளிக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் என  மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது இளம் வயதினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்எல்டி கட்சி தலைவர் அஜித் சிங் மரணம்

ராஷ்டீரிய லோக் தள கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங்(86) கொரோனா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.  முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அவர் உத்தரப்பிரதேசத்தின்  பாக்பத் தொகுதியில் 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  கடந்த 1986ம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ந்தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

  இதற்காக  அவர் குர்காவன் நகர மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித் சிங், விவசாயிகளின் நலனுக்காக பெரும் பணியாற்றிவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

`இம்மாத இறுதியில் தீவிரம் குறையும்

இந்திய மகளிர் பத்திரிகையாளர்கள் குழுவுடன் வைரலாஜிஸ்ட் ககனதீப் காங் காணொலியில் உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கொரோனா 2வது அலை மே மாதம் மத்தியிலோ அல்லது இறுதியிலிருந்து படிப்படியாகக் குறையத்  தொடங்கும். கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே கொரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுகின்றன, நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன. தற்போது உச்சமடைந்துள்ள கொரோனா தொற்று முன்பு இருந்த  அளவைவிட மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. பாதிப்பு குறையத் தொடங்கும்போது, வைரஸ் பரவலும் படிப்படியாகக் குறைந்துவிடும்’’ என்றார்.

இளைஞர்களிடம் பரவும் புதிய வகை கொரோனா

இளைஞர்களிடம் எளிதில் பரவும் புதிய வகை கொரோனா ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘பி.1.617 மற்றும் பி.1 என்கிற இந்த புதிய வகை கொரோனா தற்போது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற தென்னிந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ்களானது இளைஞர்களிடையே எளிதில் தொற்றி பரவும் அபாயம்  கொண்டதாக உள்ளது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கண்டறியப்பட்ட N440K கொரோனா வைரஸை விட ஆபத்தானது’ என்று ஐதராபாத்தை சேர்ந்த செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தனது அறிக்கையில்  கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆந்திராவில் தொற்று அதீத வேகத்தில் பரவியது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில்இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு தொற்று பரவாது என்ற அலட்சியம் நிலவும் சூழலில், இளைஞர்களை  எச்சரிக்கும் விதமாக இந்த ஆய்வு வெளி வந்துள்ளது.

Related Stories:

>