பெட்ரோல், டீசல் விலை 3வது நாளாக அதிகரிப்பு

சேலம்: தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்ததையடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி முதல் நேற்று (6ம் தேதி)  வரை தொடர்ந்து 3 நாட்கள் விலையை அதிகரித்துள்ளனர். இந்த 3 நாளில் பெட்ரோல் 47 காசும், டீசல் 61 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விலையேற்றம், மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது.

நாடு முழுவதும் தொடர்ந்து 3வது நாளாக நேற்று, பெட்ரோல் லிட்டருக்கு 21 காசும், டீசல் லிட்டருக்கு  27 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹92.69ல் இருந்து 21 காசு உயர்ந்து ₹92.90க்கும், டீசல்  ₹86.09ல் இருந்து 27 காசு உயர்ந்து ₹86.36க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே, சேலத்தில் பெட்ரோல் ₹93.12ல் இருந்து 21 காசு அதிகரித்து ₹93.33க்கும், டீசல் ₹86.53ல் இருந்து 27 காசு அதிகரித்து ₹86.80க்கும் விற்பனையானது.

பெட்ரோல்,  டீசல் விலையை மீண்டும் உயர்த்தி வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகளால் வேலையிழந்து பொருளாதாரத்தில்  மிகவும் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு, இவ்விலையேற்றம் மேலும் பாதிப்பை தந்துள்ளது. எனவே விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>