தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆய்வு: மேற்கு வங்கம் வந்தது மத்திய குழு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 4 பேர் கொண்ட மத்திய குழு நேற்று கொல்கத்தா வந்தடைந்தது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பிரசாரத்தின் போதும், வாக்குப்பதிவின் போதும் ஆங்காங்கே வன்முறை  சம்பவங்கள் நடந்தன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்று, 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார்.

வாக்குப்பதிவின் போது திரிணாமுல் கட்சி முன்னிலை பெற்ற போதே சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. கொல்கத்தாவின் ஹூக்ளி மாவட்டம், ஆரம்பாக் நகரில் அமைந்துள்ள பாஜ அலுவலகத்தை மர்ம  நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதில் பாஜ அலுவலகம் முழுமையாக எரிந்து சாம்பலானது. இதற்கு மாநில பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மம்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். பதவியேற்பு விழாவிலும் ஆளுநர் ஜகதீப் தன்கர் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து  பேசினார்.

 பாஜ தேசிய தலைவர் நட்டா கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திரிணாமுல் கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து  விட்டுள்ளனர். அவர்களால் பாஜவை சேர்ந்த 14 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார். வன்முறையால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது’’  என்றார். இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது.

இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக அறிக்கை தருமாறு மேற்கு வங்க மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது. ஆனால் இந்த அறிக்கை தரப்படாததால், வன்முறை சம்பவங்களை தடுக்க மாநில அரசு  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக  அறிக்கை தர 4 பேர் கொண்ட குழுவை உள்துறை அமைச்சகம் நேற்று அனுப்பியது. கூடுதல் செயலாளர் மற்றும் சிஆர்பிஎப் அதிகாரிகள் கொண்ட இக்குழு நேற்று கொல்கத்தா வந்தடைந்தது.  இவர்கள் வன்முறை சம்பவங்கள் நடந்த இடங்களில்  நேரடியாக சென்று ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தருவார்கள் என கூறப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற முடியாத பாஜ, சட்டம் ஒழுங்கை சீர்கெட்டு விட்டதாக கூறி குறுக்கு வழியில் மம்தா அரசுக்கு நெருக்கடி தர முயற்சிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மத்திய அமைச்சர் கார் மீது கல்வீச்சு

இதற்கிடையே மத்திய அமைச்சர் முரளீதரன் நேற்று தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் தன்னுடன் வந்த வாகனத்தை அடித்து  ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாகவும், தனது அலுவலர்கள் மீது தாக்கியதாகவும் கூறி உள்ளார்.  இதனால் தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பியதாகவும் முரளீதரன் கூறி உள்ளார். மத்திய குழு ஆய்வு நடத்த சென்ற நிலையில் மத்திய அமைச்சர் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள்ளா?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ‘‘வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறையில் இறந்தவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி தலா ₹2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். தேர்தல் ஆணையத்தின் பொறுப்பின் கீழ்  சட்டம் ஒழுங்கு இருந்த போது 16 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பாதி பேர் திரிணாமுல் கட்சியினர். மீதி பேர் பாஜவினர். புதிய அரசு பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் பாஜ தலைவர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள்.  தூண்டிவிடுகிறார்கள். கடிதங்களை அனுப்புகிறார்கள், விசாரணை குழுவை அனுப்புகிறார்கள். இதிலிருந்து அவர்கள் மக்கள் தீர்ப்பை ஏற்க தயாராகவில்லை என தெரிகிறது. அவர்கள் மக்கள் ஆணையை ஏற்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’  என்றார்.

Related Stories: