மோசடி வழக்கில் கைதான ஹரிநாடாரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக தொழிலதிபரிடம் ரூ.7.20 கோடி மோசடி செய்ததாக கைதான  ஹரிநாடாரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 3,893 கிராம் தங்கம், ரூ.8.76  லட்சம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  பெங்களூருவை  சேர்ந்த வெங்கட் ரமணி என்ற தொழிலதிபரிடம் ₹7.20 கோடி மோசடி செய்ததாக  தமிழக மாநிலத்தை சேர்ந்த பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரள  மாநிலத்தில்  கைது செய்துள்ளனர்.  இதற்கு முன்னதாக இதேபோன்று மோசடி செய்ததாக ஹரி நாடாரின் நண்பரான ரஞ்ஜித்  என்பவரை கடந்த ஏப்ரல் 7ம் தேதி சி.சி.பி போலீசார் கைது செய்திருந்தனர்.  

அவரிடம் இருந்து ரூ.10 லட்சம்  ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த போலீசார்,  விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் தற்போது ஹரிநாடார்  கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஹரிநாடாரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதுவரை  போலீசார் நடத்திய விசாரணையில் ஹரி நாடார் கர்நாடகா மட்டுமின்றி, ஆந்திரா,  தெலங்கானா, மகராஷ்டிரா, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்   தொழில் அதிபர்களிடம் குறைந்த வட்டியில் அதிக தொகை கடனாக வழங்குவதாக கூறி  ஆசையை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர் தொழில் அதிபர்கள் இவர்களிடம் கடன் வாங்க  முற்பட்டபோது, சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் முன்தொகையாக  பணம் வாங்கி  கொண்டு, அதை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. பெங்களூருவிலும்  இதேபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததுள்ளார். இது தொடர்பாக  வெங்கட்ரமணியின் புகாரின் பேரில் சி.சி.பி போலீசார் தற்போது கைது நடவடிக்கை  மேற்கொண்டிருப்பதாக தெரியவந்தது. கைதான ஹரி நாடார்  அணிந்திருந்த ₹2 கோடி மதிப்பிலான 3 கிலோ 893 கிராம்  தங்கம், ₹8.76 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருப்பதாக சி.சி.பி  போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>