சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்: கமல் கடும் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் மநீம கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் படுதோல்வி அடைந்தனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல் தோல்வி அடைந்தார். இதையடுத்து மநீம தோல்விக்கான காரணம் குறித்து கமல் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதில், மநீம நிர்வாகிகள் டாக்டர் ஆர்.மகேந்திரன், எம்.முருகானந்தம், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் உள்பட 10 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

இதை ஏற்றுக்கொள்வதும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் கமல் முடிவுக்கே விடப்பட்டுள்ளது என்று தெரியப்படுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று புகார் கூறி, தனது அடிப்படை உறுப்பினரில் இருந்து விடுவித்து, துணை தலைவர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ள ஆர்.மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மிகப்பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. அவர் இனி மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. அவர் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும்தான் தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது. அரசியல் என்ற விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமலுக்கு என் நன்றி’ என்றார். ஏற்கனவே, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசரும் மநீம கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

* மகேந்திரன் மீது தாக்கு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை: ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெருங்கனவை முன்வைத்து, முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தோம். களத்தில் எதிரிகளுடன் துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களையெடுங்கள் என்பதுதான் அனைவருடைய ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார்.

ஜனநாயகமும் சில நேரங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு ‘அனுதாபம்’ தேட முயற்சிக்கிறார். தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். தோல்வியின்போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியது இல்லை. கொண்ட கொள்கையில், தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை. மண், மொழி, மக்கள் காக்க களத்தில் நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: