கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார்: பாடகர் கோமகனும் உயிரிழப்பு

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு (74), காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் மாணவன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சிரித்து வாழ வேண்டும், கடல் மீன்கள், பணக்காரன், நடிகன், சின்னத் தம்பி, திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில், வாலி, கில்லி, சிங்கம், காஞ்சனா 2 உள்பட 230க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பாண்டு. காமெடி கேரக்டரில் தனது மேனரிசம் மூலம் பிரபலமானவர். இவர் சிறந்த ஓவியரும் ஆவார்.  தென்னிந்தியாவிலே ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர் பாண்டு மட்டும்தான். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பின்டு வெள்ளச்சி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார். அதிமுகவின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் உடல்தகனம் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று நடந்தது. அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி (இணை ஒருங்கிணைப்பாளர், அதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.டி.வி. தினகரன் (பொதுச் செயலாளர், அமமுக) இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோமகன் மரணம்: சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் புகழ்பெற்றவர் பாடகர் கோமகன். இவர் பார்வையற்றவர். இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். இந்த படத்துக்கு பிறகு சென்னை ஐசிஎப்பில் இவருக்கு வேலை கிடைத்தது. கடந்த 2019ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது இவருக்கு கிடைத்திருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட ஆர்கெஸ்ட்ராவை வைத்திருந்தார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கோமகன், சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை உயிரிழந்தார். மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் கோமகன் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

* பாண்டு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தென்னிந்தியாவிலேயே ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரிய பாண்டு, நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை முத்திரையாகப் பதித்துப் புகழ்பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி ஓவிய உலகிற்கும் பேரிழப்பாகும். பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: