தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நிலையில் மூத்த தலைவர்களிடம் நேரில் சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்

சென்னை: தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில் மு.க ஸ்டாலின்  மூத்த தலைவர்களிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று காலை 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை கோரினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனை சந்தித்தும் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அதேபோன்று, முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேற்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் தனியரசு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் தருமபுரம் ஆதீனம் சார்பிலும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

* மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும்

திமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, மு,க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் நேற்று காலை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மு.க.ஸ்டாலினை, ‘‘வெற்றி திருமகனே வருக!’’ என சங்கரய்யா வரவேற்று, சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் பேசிய சங்கரய்யா, ‘‘வெற்றி திருமகனே வருக! உங்கள் தலைமையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய, இந்த இக்கட்டான காலகட்டத்தில் உங்கள் தலைமையிலான அரசு மக்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் தேசிய அளவில் மத சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து, அதன் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். கலைஞரின் ஆட்சியை நீங்கள் தொடர வேண்டும்’’ என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், பொன்முடி. எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>