கொரோனா ஊரடங்கில் நேரத்தை வீணாக்காமல் திருச்செந்தூரில் தவில் அடித்து பயிற்சி பெறும் சிறுவர்கள்

திருச்செந்தூர்: கொரோனா ஊரடங்கிலும் நேரத்தை வீணாக்காமல் திருச்செந்தூரில் தவில் அடித்து பயிற்சி பெறும் இளஞ்சிறார்களை ஊர்மக்கள் பாராட்டினர். உலகம் முழுவதும் கொரோனா வைரசின் கோர பிடியில் இருந்து மீள போராடி வரும் நிலையில், நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்ேவறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் எடுக்கவும் அனுமதி அளித்துள்ளது. எனவே கடந்த ஒரு வருடமாக குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்று வருகின்றனர்.

மற்ற நேரங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மொபைல், லேப்டாப் போன்றவற்றில் கேம்ஸ், சாட்டிங் என பிசியாக இருக்கின்றனர். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு திருச்செந்தூரில் தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களான வேம்புராஜ்- சுப்புலட்சுமி தம்பதியின் மகன்கள் கார்த்திகேயன் (12), முத்துசுடலை (5) ஆகிய 2 பேரும் தங்களின் பாரம்பரிய தொழிலான தவில் (மேளம்) அடிப்பதை, தங்கள் தந்தையிடம் இருந்து மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். பரம்பரை, பரம்பரையாக வேம்புராஜ், திருச்செந்தூர் ேகாயிலுக்கு பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு, திருமணம், சடங்கு மற்றும் கோவில் கொடை விழாக்களுக்கு தவில் வாசித்து வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விழாக்களுக்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் வாசிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தாலும், வேம்பு ராஜ் தினமும் காலையும், மாலையும் தொடர்ந்து பயிற்சி செய்வது வழக்கம். தந்தை வாசிப்பு பயிற்சியால் ஈர்க்கப்பட்ட அவரது மகன்கள் கார்த்திகேயன் (12), முத்துசுடலை (5) ஆகியோர் தனது பெற்றோரிடமிருந்து ஆர்வத்துடன் தவில் வாசிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். தாய், தந்தையரின் வழிகாட்டுதலில் இதுவரை நையாண்டி, தாலாட்டு, சாமியாட்டம் போன்ற தாள முறைகளை கற்றுள்ளனர்.

கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட அனுமதிப்பது ஆபத்தாக உள்ளது. வீட்டிற்குள்ளும், குழந்தைகள் டி.வி., மொபைல் கேம்ஸ் என மெய் மறந்து  இருந்து வருகின்றனர். இதிலிருந்து மாறுபட்டு சிறுவர்களான கார்த்திகேயன், முத்துசுடலை இருவரும் பாரம்பரிய தொழிலான தவில் கற்று வருவதை அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Related Stories: