கவர்னர் மாளிகையில் எளிய விழா; புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பிற்பகல் பதவியேற்பு: துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் 4வது முறையாக ரங்கசாமி முதல்வராக நாளை பிற்பகல் பதவியேற்றுக் கொள்கிறார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்றன. எனவே இந்த கூட்டணி சார்பில் ஆட்சியமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக மேலிட தலைவர் நிர்மல்குமார் சுரானா உள்ளி–்ட்ட தலைவர்கள் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக இருகட்சி தலைவர்களும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் என்ஆர் காங்கிரசுக்கு முதல்வர் உள்பட 4 அமைச்சர் பதவிகளும், பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகளும் ஒதுக்குவதென முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டணி அரசின் முதல்வராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ள ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க கவர்னர் தமிழிசையிடம் கடந்த 4ம்தேதி உரிமை கோரினார். கவர்னர் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் புதுச்சேரியின் 20வது முதல்வராக ரங்கசாமி நாளை பதவியேற்கிறார். பிற்பகல் 1 மணியளவில் கவர்னர் மாளிகை அல்லது காந்தி திடலில் நடக்கும் எளிய விழாவில் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

ரங்கசாமியுடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்களா? என்பது பற்றி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த பதவியேற்பு விழாவை மிகவும் எளிமையாக ஒரு மணி நேரத்திற்குள் நடத்தவும், இதில் பங்கேற்க விஐபிக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புதுவை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் பாஜக கேட்டுள்ள துணை முதல்வர் பதவி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டிய நிலை இருப்பதால், தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவியை மட்டும் தர ரங்கசாமி ஒப்புதல் தெரிவித்து வரும் நிலையில், இதில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே வருகிற 10ம்தேதி அமைச்சரவை பதவியேற்கலாம் என்று தெரிகிறது. புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள ரங்கசாமி நேற்று சேலம் விரைந்து தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் வழிபட்டார். என்ஆர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜெயபால், மூத்த வழக்கறிஞர் பக்தவச்சலம் ஆகியோர் நேற்று ராஜ்நிவாசில் கவர்னரை சந்தித்து பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>