கொரோனா தடுப்பு மருந்து வீணாகவில்லை: கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு அனுப்பிய கொரோனா தடுப்பு மருந்தை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் பயன்படுத்தியதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. அவற்றை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து வருகிறது. இவ்வாறு அனுப்பப்படும் தடுப்பு மருந்தை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் வீணாக்கி உள்ளது அம்பலமாகி உள்ளது.

இந்த நிலையில் தங்களுக்கு கிடைத்த தடுப்பு மருந்தை ஒரு சொட்டு கூட வீண் செய்யாமல் பயன்படுத்தியதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

கேரளாவுக்கு 73 லட்சத்து 38 ஆயிரத்து 806 டோஸ் தடுப்பு மருந்துகள் வந்தன. ஆனால் கேரள அரசு அதைவிட அதிகமாக 74 லட்சத்து 26 ஆயிரத்து 164 டோஸ்களை பயன்படுத்தியது. ஒவ்வொரு பாட்டிலிலும் சில துளிகள் வீணாகும். ஆனால் அதைக்கூட சுகாதாரத்துறையினர் சிறப்பாக பயன்படுத்தி கூடுதல் பேருக்கு தடுப்பு மருந்தை கொடுத்து உள்ளனர். இப்படி சிறப்பாக செயல்பட்ட நர்சுகள், சுகாதாரத்துறையினருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று பினராயி விஜயன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இது குறித்து அறிந்த பிரதமர் மோடி, கேரள அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

‘கேரளாவில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு மருந்தை வீணாக்காமல் பயன்படுத்தியதாக அறிந்தேன். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சிறப்பான முறையில் செயல்பட்ட கேரள சுகாதாரத்துறையினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்’ என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டணம் நிறுத்தி வைப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நேற்று கூறியது: கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. பரிசோதனை பாசிட்டிவிட்டி சதவீதம் குறையவில்லை. நோய் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக கல்லூரி விடுதிகள் மற்றும் லாட்ஜுகளை பயன்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மின் வாரியம் மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிப்பது 2 மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என்றார்.

Related Stories: