சீரம் நிர்வாக அதிகாரி, குடும்பத்தினருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வேண்டும்: தொடர் அச்சுறுத்தலால் கோர்ட்டில் முறையீடு

மும்பை: பல்வேறு இடங்களில் இருந்து ெதாடர் அச்சுறுத்தல் வருவதால், சீரம் நிர்வாக அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இந்தியாவில் அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வதற்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதில் அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தனியார் செய்தி நிறுவனம்  ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆதர் பூனவல்லா, ‘இந்தியாவில் சில மாதங்களுக்கு  கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள்  உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100  மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும். லண்டனில் இருந்து  இந்தியா வந்தவுடன், தடுப்பூசி உற்பத்தியை தீவிரப்படுத்துவேன்’ என்றார். இந்நிலையில் ஆதர் பூனவல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஆதர் பூனவல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அவரின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: