மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்: மகளிர் பிரிவில் ஆஷ்லே பார்டி, சபலென்கா வெற்றி

மாட்ரிட்: ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிசில், ரஃபேல் நடால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளுக்கு பயிற்சி களமாக கருதப்படும் மாட்ரிட் ஓபன் போட்டி, கடந்த வாரம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் துவங்கியது. தரவரிசையில் தற்போது 2ம் இடத்தில் உள்ள ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், மாட்ரிட் ஓபனில் 5 முறை ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். இம்முறையும் அவரே பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று நடந்த 2ம் சுற்று போட்டியில் அவர், சக வீரர் 18 வயதேயான கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியாவுடன் மோதினார்.

இதில் மிக எளிதாக 6-2, 6-1 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார். நேற்று கார்லோசுக்கு 18வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்த பின்னர், கார்லோசை தோளோடு அணைத்து தேற்றிய நடால், பிறந்த நாள் கேக் முழுவதையும் நீயே சாப்பிட்டு விடாதே. எங்களுக்கும் கொடு’ என்று நகைச்சுவையாக கூறி, அவரை உற்சாகப்படுத்தினார். ‘இந்த பிறந்தநாள் எனக்கு மறக்க முடியாத ஒன்று. உலகின் மிகச் சிறந்த வீரரை எதிர்த்து ஆடியிருக்கிறேன். இந்த போட்டி, எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன். இதே போல் மேலும் சில போட்டிகளில் ஆடினால் நானும் விரைவில் முன்னணி வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவேன்’ என்று கார்லோஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள நடால், அதில் 21 வயதேயான ஆஸ்திரேலிய இளம் வீரர் அலெக்சி பாப்ரியின்னுடன் மோதவுள்ளார். இதுபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில், பெலாரசின் ஆரியானா சபலென்கா,  பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-1 என சபலென்கா கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் 4-0 என முன்னிலையில் இருந்தபோது மெர்டென்ஸ் காயம் காரணமாக விலகினார். இதனால் சபலென்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு கால் இறுதியில், நம்பர் ஒன் வீராங்கனை  ஆஷ்லே பார்டி, 6-1, 3-6, 6-3 என்ற  செட் கணக்கில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவோவை வீழ்த்தினார்.

ஸ்பெயினின் பவுலா படோசா, 6-4, 7-5 என்ற செட் கணக்கில், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கையும், ரஷ்யாவின் அனஸ்தேசியா, 7-6, 7-6 என செக்குடியரசின் கரோலினா முச்சோவாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

அரையிறுதியில் ஆஷ்லே பார்டி-ஸ்பெயினின் பவுலா படோசா இன்று மோதுகின்றனர். நாளை மற்றொரு அரையிறுதியில் சபலென்கா, ரஷ்யாவின் அனஸ்தேசியா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Related Stories: