2019ல் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பள்ளத்தில் கொட்டி தீ வைத்து அழிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பள்ளம் ஒன்றில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே ஜல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்ட 284 கேன்களில் இருந்த சுமார் 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனை அழிப்பதற்காக, வடக்கிபாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஐயம்பாளையத்தில் உள்ள புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று, பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு பிரிவு அலுவலக வளாகத்தில் அடுக்கி வைத்திருந்த எரிசாராய கேன்கள் சரக்கு வாகனத்தில் ஐயம்புதூர் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.பின்னர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி., சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர், பாலமுருகன், எஸ்ஐ.,சின்னகாமனன், கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார், பொள்ளாச்சி ஜேஎம்1 கோர்ட் தலைமை எழுத்தர் கவுரி ஆகியோர் முன்னிலையில் புறம்போக்கு நிலத்தில் உள்ள பள்ளம் ஒன்றில் அடுத்தடுத்து கேன்களில் உள்ள 10ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தையும் கொட்டி போலீசார் தீ வைத்தனர். சில மணிநேரம் எரிந்த தீயானது பின் தானாகவே அணைந்தது. இருப்பினும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதை தடுக்க, தீயணைப்பு நிலைய குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

Related Stories:

>