கோடை மழையால் போடி கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

போடி: போடி பகுதியில் வங்காரு சாமி கண்மாய், சிறுகுளம் கண்மாய், புதுக்குளம் கண்மாய், சங்கரப்ப நாயக்கன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளன. போடி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பல பாகங்களாக ஒன்று சேர்ந்து சாம்பலாற்று அணையில் மறுகால் பாய்ந்து கொட்டக்குடி ஆற்றில் வெள்ளமென பெருக்கெடுக்கும் போது இந்த கண்மாய்களில் தண்ணீர் நிரம்புகிறது. இந்த கண்மாய்களின் தண்ணீர் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், ஆழ்குழாய் பாசனத்திற்கும் பலன் கிடைக்கிறது.

மேலும் போடி நகரின் குடிநீர் ஆதாரத்திற்கும் இக்கண்மாய்களே முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்நிலையில் போடி பகுதியில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் கண்மாய்களில் மழைநீர் எட்டி பார்க்க துவங்கியுள்ளது. நேற்று 80 ஏக்கர் அளவு கொண்ட சங்கரப்ப நாயக்கன் கண்மாயில் மழைநீர் பரவலாக தேங்கி கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளதால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>