மலர் தொட்டிகளை வைக்க மாடத்தை தயார் செய்யும் பணி மும்முரம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் மலர்கள் வைப்பதற்காக மாடத்தை தயார் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கோடை காலத்தின்போது ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இவர்களை வரவேற்கும் வகையிலும், அதேசமயம் அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பல வகையான மற்றும் பல வண்ணங்களை கொண்டு மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் காணப்படும் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக கண்காட்சியின்போது மாடங்களிலும், புல் மைதானங்களிலும் பல வடிவங்களிலும் அடுக்கி வைக்கப்படும். இதற்காக, 35 ஆயிரம் தொட்டிகளும் தயார் செய்யப்படும். ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

எனினும், வழக்கம்போல் பூங்கா நிர்வாகம் மலர் செடிகளை தயார் செய்துள்ளன. தற்போது 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர்கள் பூத்துள்ளன. இந்த மலர் தொட்டிகள் அடுக்கி வைப்பதற்காக தற்போது மாடத்தை தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மாடங்களில் வர்ணம் பூசும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் மாடத்தில் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது ஊட்டியில் வெயில் வாட்டி வரும் நிலையில், நாள்தோறும் மலர் தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: