தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணி: கண்காணிப்பு குழு ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணியை கலெக்டர் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கண்காணிப்புக் குழுவும் அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த குழுவின் தலைவரான கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை பார்வையிட்டனர். அங்கு ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதியையும் ஆக்சிஜன் தயாரிப்பு பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தல் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினர்.

 குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதிக்கு தேவையான குடிநீர் வழங்குவது தொடர்பாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும், பணியாளர்களை எந்த பாதையில் உள்ளே அனுமதிப்பது என்பது குறித்தும், உற்பத்தியாகும் ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் வந்து செல்லும் தனியான பாதை குறித்தும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும் மின்சார வசதி செய்யப்பட்ட பின்பு எத்தனை நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறித்தும், குடிநீர் மற்றும் மின் இணைப்பு பணிகளை விரைந்து முடித்து ஆக்சிஜன் உற்பத்தியை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். ஆய்வின்போது, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: