டாஸ்மாக்கை மூடக்கோரி வழக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மது விற்பனைக்கு அனுமதிப்பது ஏன்? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கு விசாரணையின்போது, மனிதர்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மது விற்பனையை அனுமதிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீல் ஒருவர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. மது அருந்துவோருக்கு நோய் பாதிப்பு குறையும் என்ற தவறான கருத்து பரப்பப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மது அருந்துவதால், நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது. ‘‘குடிமகன்களால்’’ கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாது. இவர்கள் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலே உள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது.

தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டால் பரவல் மேலும் அதிகரிக்கும். தற்போது திருமணம், துக்க நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவுகளில் மக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் மது பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. இவற்றின் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும். எனவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே மூடவும், டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக மத்திய உள்துறை செயலர் தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘மனிதர்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுபானங்களின் விற்பனையை இன்னும் அனுமதிப்பது ஏன்’’ என கேள்வி எழுப்பினர். பின்னர், மனுவிற்கு மாநில அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

>