வண்டலூர் பூங்காவில் சிறுத்தை தப்பியதா? வாட்ஸ்அப்பில் பரவும் தகவலால் பரபரப்பு

சென்னை: வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது, கொரோனா வேகமாக பரவி வருவதால் வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.  இந்நிலையில், பூங்காவில் உள்ள ஒரு சிறுத்தை தப்பிவிட்டதாகவும், இதனால், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் வாட்ஸ்அப்பில் தகவல் வேகமாக பரவியது. இதனிடையே, வண்டலூர் பூங்காவை சுற்றி நெடுங்குன்றம், ஊனமாஞ்சேரி, காரணைப்புதுச்சேரி, அருங்கால், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், குமிழி பெருமாட்டுநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வன காப்பு காடுகள் உள்ளன. இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தை உலாவுவதாக தகவல் பரவியது.

அப்போது, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தும், சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் வனத்துறையினர் கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். பூங்காவிலிருந்து சிறுத்தை நேற்று காலை தப்பியதாக தகவல் பல்வேறு கிராம மக்களிடையே காட்டுத் தீப்போல் பரவியது. இதனால், பொதுமக்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து பூங்கா நிர்வாகி ஒருவர் கூறுகையில், “வண்டலூர் உயிரியல்  பூங்காவில் சிறுத்தை, புலி, மற்றும் சிங்கம் உள்ளிட்ட முக்கிய விலங்குகளை  கூண்டுகள் அமைத்து அதில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து  கண்காணித்து வருகிறோம். எந்த ஒரு விலங்கும் பூங்காவை விட்டு தப்பி  செல்லவில்லை. ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமி பகுதியில் ஒரு மூதாட்டி மானை பார்த்து விட்டு சிறுத்தை என்று தகவல் கொடுத்துள்ளார்.  இதில், வெளி பகுதிகளிலுள்ள காடுகளில் சிறுத்தை நடமாட்டம்  இருக்கிறதா, இல்லையா என்று தெரியாது.  இதுகுறித்து வனத்துறையினருடன்  சேர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்,” என்றார்.

Related Stories: