முடவியல் பிரிவு முடக்கம் தவறான தகவல்: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை விளக்கம்

சென்னை: முடவியல் பிரிவு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் தவறானது என ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள முடவியல் தொகுதி எட்டு தளங்களை கொண்டது. கோவிட் முதல் அலையின் போது இது கோவிட் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. தொற்று குறைந்த பிறகு, அனைத்து கோவிட் நோயாளிகளும் புதிய டவர் பிளாக்-3ல் அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து முடவியல் தரைத்தளத்தில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் மாடியில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் மையம் அரசு விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 32,472 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தினசரி 1,000-1,200 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 2,3,4 வது தளங்களில் மொத்தமாக 111 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 66 படுக்கைகள் மட்டுமே ஆக்ஸிசன் வசதி கொண்டுள்ளது.

தற்போது இந்த தளங்கள் சிறுநீரகம், வாஸ்குலர் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைகளின் நோயாளிக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேற்கண்ட துறைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தொகுதியில் செயல்பட்டு வந்தன. தற்போது அவை கோவிட் சிகிச்சை தொகுதியாக மாற்றப்பட்டுள்ளன. 5,6வது தளங்கள் முடவியல் நோயாளிகளுக்கும், ஆய்வக சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பிற தளங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்மந்தப்பட்ட தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ளன. சிறப்பு துறைகள் (சிறுநீரகம், பிளாஸ்டிக் அறுவை மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை) முடவியல் சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளதால் கோவிட் சிகிச்சைக்கு சூப்பர்ஸ்பொஷாலிட்டி தொகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 144 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 136 படுக்கைகள் ஆக்ஸிஜன் விநியோக வசதியை கொண்டுள்ளன.

முதல் தளத்தில் மிகவும் முக்கியமான கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 3வது டவர் பிளாக்யை முழுமையாக கோவிட் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கோவிட் படுக்கைகளின் எண்ணிக்கை 1,618 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 1,042 ஆக உயர்ந்துள்ளது. இந்த பிளாக்கின் தரைத்தளம் மற்றும் 1 முதல் 6 வரையிலான தளங்கள் ஏற்கனவே கொரோனா வார்டுகளாக செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக 7, 8வது தளங்கள் 550 ஆக்ஸிஜன் படுக்கைகளும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த உத்திகள் அனைத்தும் தற்போதைய நெருக்கடியை எளிதாக்க உதவும் என்ற காரணத்தினால் தான் முடிவியல் பிரிவு கோவிட் சிகிச்சை பிரிவாக மாற்றப்படவில்லை. எனவே இப்பிரிவு செயல்படாமல் இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: