ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும்? ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை? மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தாக்கத்தின் தற்போதைய நிலை, ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்து கள்ள சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு தமிழக அரசுத் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.  கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, தலைமை நீதிபதி, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும், அதிகாரிகள் இருப்பதனால் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளரிடம் விபரங்களை பெற்று அரசு தரப்பு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது துவங்கப்படும் என்று மத்திய அரசு வக்கீலிடம் தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன்,  தமிழகத்திற்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 9ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரெம்டெசிவிர்  மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து நாளை விளக்கம் அளிக்கிறேன் என்றார்.இதையடுத்து நீதிபதிகள், தற்போதைய நிலையில் புதிய அரசு பதவியேற்று, புதிய அரசு தரப்பு வக்கீலை நியமிக்க இரண்டு நாட்கள் ஆகும். அதேநேரம், தற்போது வரை எடுத்து இருக்கக்கூடிய சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை செயலாளரிடம் கேட்டு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தொலைக்காட்சி பத்திரிகைகளில் அரசியல் கட்சியினரின் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது என்று தலைமை நீதிபதி கூறினார்.  அதற்கு பதிலளித்த மூத்த வக்கீல் பி.வில்சன், உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு வெற்றி கொண்டாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது.

கொண்டாட்டங்கள் கூடாது என்று கட்சித் தலைவரே அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழகத்திற்கு  தினமும் 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என்று  நிபுணர் குழு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது அது தொடர்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை நாளை (இன்று) தள்ளிவைக்கிறோம் என்று தெரிவித்த நீதிபதிகள்,  கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்த கோரியும், தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஆயுர்வேதா கிளினிக்குகள் அமைக்கக் கோரியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனிக்க உறவினர்களை அனுமதிக்கக்கூடாது எனக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இந்த வழக்குடன் சேர்த்து  பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: