முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தலைவர்கள் வாழ்த்து: 3வது நாளாக குவியும் வாழ்த்துக்கள்

சென்னை: முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வராக முதன் முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபார நிபுணர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  . நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று மனிதநேய ஜனநாயக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  மேலும், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்குமாரின் மகனும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதை தொடர்ந்து, நடிகர் சத்தியராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.   அதை போன்று, நடிகர் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா நாசர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் மாநிலச் செயலாளராக இருந்த கமீலா தேர்தலுக்கு முன்பு அந்த பதவியை ராஜினாமா செய்தார்.  மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்ல தாம் நேரில் சந்தித்ததாகவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கமீலா கூறினார்.   திருநாவுக்கரசர்: தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த முதல்வராக செயல்படுவார். அரசியலில் ஏறக்குறைய 45 ஆண்டுகள் அவருக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது.  தமிமுன் அன்சாரி: திமுக தலைவராக பொறுப்பேற்று மாபெரும் அரசியல் வெற்றியை இன்றை தினம் பெற்றுள்ளார். சிறப்பு மிக்க தலைவராக மக்கள் அவரை அங்கீகரித்திருக்கிறார்கள்.

 நடிகர் சத்தியராஜ்: சரியான தருணத்தில் கிடைத்த மிக சரியான வெற்றி. மிக மகிழ்ச்சியான வெற்றி. பொறுப்பேற்க உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சவாலான கால கட்டம். மிக சிறப்பாக சமாளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த வெற்றியை ஒரு பெரியாரின் தொண்டனாக நான் கொண்டாடுகிறேன்.   இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>