கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து விடுமுறைகால அமர்வு உத்தரவிட்டுள்ளது.  சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வக்கீல் பாலாஜிராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் தற்போது 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.   அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள், தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 135 கோடி மக்கள் தொகையில் 2 முதல் 5 சதவீதம் மக்களுக்கே இந்த தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும்.   கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.  இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>