காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், இன்று முதல் வரும் 20ம் தேதி வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.  கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல், தேநீர் கடைகள்  மற்றும் இதர கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதே போன்று டாஸ்மாக் கடைகளும் பிற்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அரசு அறிவித்தது. மேலும், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிந்தால் மட்டுமே மதுபான வகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் 5,300 டாஸ்மாக் கடைகள் அரசின் கட்டுபாடுகளை பின்பற்றி பிற்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தன. அதன்படி ேம 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள் மற்றும் இதர கடைகள் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டன.  இதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் நேரத்தை குறைக்க ஆலோசனை மேற்கொண்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 20ம் தேதி வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதில், இன்று காலை 4 மணி முதல் மே 20ம் தேதி 4 மணி வரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களில் செயல்படும் மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறக்க அனுமதி கிடையாது. அதே நேரத்தில் தனியாக உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியில்லாமல்  பிற்பகல் 12 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கடைகளும் இன்று முதல் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக மேலாண்ைம இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், குறிப்பிட்ட நாட்களில் முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் கடைகள் சரியாக திறக்கப்பட்டு, மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும், கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் டாஸ்மாக் கடைகளில் எடுக்கப்பட வேண்டும். முழு ஊரடங்கு நாளான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: