புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள்பயணிக்க தடை: ரயில்வே அறிவிப்பு

சென்னை: புதிய பயண கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கை:கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் வரும் 20ம் தேதி காலை 4 மணி வரை (14 நாட்கள்) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி புறநகர் மின்சார ரயில்களில் ரயில்வே ஊழியர்கள், மருத்துவம், சட்டம்-ஒழுங்கு, அத்தியாவசிய சேவை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், அனைத்து துறைகளைச்  சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள், சென்னை உயர் நீதி மன்ற ஊழியர்கள்,  வழக்குரைஞர்கள், சென்னை போர்ட் டிரஸ்ட், காமராஜ் போர்ட் டிரஸ்ட்  ஊழியர்கள்,  பணியிலிருக்கும் இ-காமர்ஸ் தள  ஊழியர்கள், அச்சு, மின்னணு ஊடகங்களில் பணிபுரிவோர், அரசு, தனியார், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோர், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தங்கள் நிறுவனம் வழங்கிய புகைப்பட அடையாள அட்டையை பயணத்தின்போது வைத்திருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் அதன் மாணவ / மாணவியரும் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பெண்களுக்கு நாள் முழுக்க பயணம் செய்ய கொடுக்கப்பட்டிருந்த அனுமதியும் ரத்தாகிறது. பொதுமக்கள் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் கூட்டத்தை குறைக்கும் நோக்கில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நெரிசல் நேரம் / நெரிசலற்ற நேரங்கள் 14 நாட்களுக்கு பின்பற்றப்பட மாட்டாது. கூட்டத்தை கட்டுப்படுத்துதல், முகக் கவசம் அணியாததற்கு அபராதம் விதித்தல் போன்ற தேவைப்படும் கட்டுப்பாடுகளை  ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தவுள்ளது. வருகிற 20ம் தேதி காலை 4 மணியிலிருந்து தற்போது பின்பற்றப்படும் நெரிசல் / நெரிசலற்ற நேர கட்டுப்பாடுகள் மறுபடி பின்பற்றப்படும்.

Related Stories: