தமிழகத்தில் 102 டிகிரி கொளுத்தியது வெயில்: சில இடங்களில் இடியுடன் மழை

சென்னை: குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 முதல் 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. காஞ்சிபுரம், மதுரை, சேலம் மாவட்டங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் நேற்று அதிகபட்சமாக 114 டிகிரி வரை இருந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், கத்திரி வெயில் காலமும் நேற்று முன்தினம் தொடங்கியது. இருப்பினும், தற்போது வளி மண்டல மேல்அடுக்கு சுழற்சி அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.  நேற்றைய நிலவரப்படி, குமரிக் கடல் பகுதியில் 5.8 கிமீ உயரம் வரை வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. கடலோர மாவட்டங்களில் ஈரப்பதம் 90 சதவீதமாக இருந்ததால் கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாக 5 டிகிரி வரை வெயில் இருக்கும் என்று கணிக்கப்பட்டதால் வெப்பம் அதிகமாக உணரப்பட்டது.  இந்த வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் நிலவியது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியிருந்தது. அதாவது, வேலூரில் 109 டிகிரி, திருச்சி 111 டிகிரி, சென்னை, தாம்பரம் 106 டிகிரி, சேலம், மதுரை 108 டிகிரி, அரக்கோணம் 109 டிகிரி வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் பகுதியில் 114 டிகிரி அளவுக்கு வெப்பம் உணரப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக அதிக வெக்கை ஏற்பட்டு புழுக்கத்தை உணர்ந்தனர். உடலில் இருந்து வியர்வை மூலம் நீர் சத்து வெளியேறுவதால் நீர் வேட்கையும் அதிகம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும்.

Related Stories: